நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசை யுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலை காரணமாக்கி, இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான செய்திகளை நம்பி பொதுமக்கள் பதட்டம் அடைய வேண்டாம் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவிலான எரிபொருள் இருப்பு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருப்பதுடன், ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களின் வரவுக்காகவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே, செயற்கை தட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் எனவும், நிரப்பு நிலையங்கள் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், வடக்கு மாகாணத்திற்கான எரிபொருள் இருப்பு போதுமானதாக உள்ளது என்றும் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அரசின் தரப்பிலிருந்து வரும் உறுதியான தகவல்களை மட்டுமே நம்பி செயற்படுமாறு பொதுமக்களுக்கு எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.