இலங்கையில் கொவிட் தொற்றின் பாதிப்பு தொடர்பில் வெளியான எச்சரிக்கை!

இலங்கை முழுவதும் பரவி வரும் கொவிட் வைரஸின் புதிய திரிபினால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர இந்த தகவலை வெளியிட்டார்.

இலங்கை தொற்றுநோயியல் பிரிவின் தகவலின்படி, தற்போது 9% முதல் 13% வரை சுவாச நோயாளிகள் இந்த புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகை மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தாலும், 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது அபாயமாக இருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.

உயிரிழந்த இருவரும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பாரிய ஆபத்து நிலை இல்லை என்றும், தேவையற்ற அச்சம் தேவையில்லை என்றும், ஆனால் சிலர் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் கூறினார்.