யாழில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை – ஒரு வர்த்தகர் கைது
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மரத்தளபாட வர்த்தகர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொண்ட விசாரணைகளில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சந்தேகநபரிடமிருந்து போதை மாத்திரைகள் பெற்றிருப்பது தெரியவந்தது.
அதன்பேரில் குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 330 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் அவர் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில், ஜஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளில், சந்தேகநபர் மாணவர்களிடம் போதை மாத்திரைகளை விற்பதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் ஜஸ் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்துவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.