இலங்கையில் ஆபிரிக்க காய்ச்சல் குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தல்!

இலங்கையில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (African Swine Fever) பரவக்கூடிய மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளைக் குறித்து சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல அவர்கள் வெளியிட்ட இந்த அறிவிப்பு, ஜூன் 13ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. பன்றிகள் அதிக ஆபத்துள்ள விலங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களில் பல பிரதேச செயலகங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச கால்நடை அலுவலரின் அனுமதி இல்லாமல் பன்றிகள், பன்றி இறைச்சி அல்லது அதனுடன் தொடர்புடைய பொருட்களை ஆபத்துள்ள பகுதிக்குள்/வெளியே கொண்டு செல்வது, அகற்றுவது, எடுத்துச் செல்வது, அப்புறப்படுத்துவது என்பன தடைசெய்யப்பட்டுள்ளது.

இறைச்சிக்காக பாதிக்கப்பட்ட பன்றிகளை வெட்டுவது மற்றும் நேரடி விலங்கு சந்தைகளில் இவைகளைப் பயன்படுத்துவது தடைபட்டுள்ளது.

இது போன்ற கட்டுப்பாடுகள், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும்.