கொழும்பு வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது விடயத்தில் மேலும் 77 நபர்களிடம் வாக்குமூலங்கள்

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன கைது செய்யப்பட்டதையடுத்து, அவரின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகள் தொடர்பான பாதிக்கப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், வைத்தியர் மகேஷி விஜேரத்ன, வெளிப்புற நிறுவனங்களிலிருந்து அறுவை சிகிச்சை உபகரணங்களை பெற்றதில் முறைகேடு, மற்றும் அதன் காரணமாக நோயாளிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இவ்விடயம் தொடர்பில் இப்போது வரை 77 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல் அளித்து வாக்குமூலங்கள் வழங்கியுள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது தகவல் உள்ளவர்கள்,1954 என்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் ciaboc_gen@ciaboc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.