இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட ஆசிய நாடுகளை அச்சுறுத்தும் கொவிட் தொற்று; ஒரு குழந்தை மரணம்
ஆசிய பிராந்தியத்தில் பரவி வரும் புதிய கொவிட் மாறுபாடுகள் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓமிக்ரோன் வைரஸின் துணைதிரிபுகளான LF.7 மற்றும் XFG ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, வைரஸ் நோய்களுக்கான நிபுணரான டாக்டர் ஜூட் ஜெயமஹா தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து பெற்ற உயிரியல் மாதிரிகளுக்கான ஆய்வின் விளைவாக இதுபற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும், முகக் கவசம் அணிதல், நெரிசலான இடங்களைத் தவிர்த்தல் போன்ற சுகாதார நடைமுறைகளை தொடர்வது அவசியம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
அதேவேளை, காலி தேசிய மருத்துவமனையில் உயிரிழந்த 1.5 மாத குழந்தைக்கு கொவிட் தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. ஆனால், இந்த வைரஸ் தற்போது ஆசியாவை தாக்கி வரும் புதிய திரிபாக இல்லை என மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறை தொடர்ந்து விழிப்புடன் செயற்பட்டு வருவதால், தேவையற்ற அச்சம் வேண்டாம் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.