தங்க விற்பனையில் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
தங்க நகை விற்பனை செய்வதுபோன்ற மோசடியின் கீழ், கண்டி வெலம்பொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த குழுவினர், வீட்டு உரிமையாளரை தாக்கி சுமார் 210 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த மே 8ஆம் திகதி இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவர், நேற்று (30) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் வழியாக ஆஜரான நிலையில், நீதவான் அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் இருவரும் இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 52 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலம்பொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.