இலங்கையில் ஒமிக்ரோன் கண்டறிவை தொடர்ந்து சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
இலங்கையில் ஒமிக்ரோன் வகையைச் சேர்ந்த இரண்டு புதிய துணைமாறுபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது நாட்டில் கோவிட் தொற்றுகளில் எந்தவிதமான குறிப்பிடத்தக்க அதிகரிப்பும் இல்லை என்றாலும், சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பை அதிகரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
மேலும், இந்த புதிய மாறுபாடுகள் முதன்முதலில் 2025 ஜனவரி மாதம் உலகளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டவை. அதன் பின்னர் பல்வேறு நாடுகளில் பரவியது. தற்போது இவை இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளன.
அத்துடன், தொண்டை வலி, காய்ச்சல், இலேசான இருமல், சோர்வு, தசை வலி போன்றவையே இந்த மாறுபாடுகளின் பொதுவான அறிகுறிகள் ஆகும். எனினும், இவை கடுமையான நோயை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டதாக இதுவரை தெரியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக, மக்கள் அச்சமின்றி, ஆனால் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும், சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.