எரிபொருள் விலைக் குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!


மொரட்டுவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை மீண்டும் ஒருபோதும் கடந்த காலத்தில் அனுபவித்த பொருளாதார நெருக்கடிகளை சந்திக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது "நாடு தற்போது ஸ்திரத்தன்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எரிபொருள் விலைகளும், மருந்துகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது."

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த காலங்களில் அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் பரஸ்பர வரிகளை விதித்ததை குறிப்பிடுகையில், அதனால் இலங்கையின் சில வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். 

"ஆனாலும் தற்போது நமது குழுவினர் அமெரிக்காவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினைகளை சீராக தீர்த்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்றும் ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை, நாட்டின் வரலாற்றிலேயே அதிகளவு திறைசேரி வருமானம் கிடைக்கும் ஆண்டாக 2025-இனை மாற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய இலக்காக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.