வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்!- வட மாகாணத்தில் பெய்யும் கனமழை
வங்காள விரிகுடாவில் தற்போது நிலவும் காற்றழுத்த சூழ்நிலைகளின் காரணமாக, நாடு முழுவதும் மழை தொடரும் எனக் கூறப்படுகின்றது.
மேலும், எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் புயல் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் மற்றும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஊடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது: "கடந்த 8ஆம் திகதி சனிக்கிழமை வழங்கப்பட்ட முன்னறிவிப்பிற்கிணங்க, வங்காள விரிகுடாவில் உருவான காற்றுச் சுழற்சி, தற்போது இலங்கைக்கு தென்கிழக்காக, நாட்டுக்கு அருகாமையில் காணப்படுகின்றது" எனத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் துணைபுறமாக உள்ளடக்கிய நாட்டின் பல பகுதிகளில் மழை, எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை வரை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 17ஆம் திகதி, வங்காள விரிகுடாவில் இலங்கையின் தென்கிழக்கு திசையில் மற்றொரு காற்றுச் சுழற்சி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கிழக்கு மாகாணத்திற்கு அருகாமையில் நிலைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் பரவலான மிதமான முதல் கனமான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும், புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அதன்பின், எதிர்வரும் 21ஆம் திகதி இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்திற்கு அருகாமையில் ஒரு புதிய காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இது தீவிரமடைந்து, புயலாக மாறும் சாத்தியம் காணப்படுகின்றது.
இந்த புயலின் காரணமாக, எதிர்வரும் 22ஆம் திகதி வரை இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மிகவும் கனமழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது. இதனுடன் கடற்பகுதிகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், புயல் உருவாகும் சாத்தியம் மற்றும் அதன் பாதிப்புகளை உறுதிப்படுத்தக்கூடிய நிலை, எதிர்வரும் 18ஆம் திகதிக்குப் பிறகே தெளிவாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயலுக்குப் "சென்வார்" எனப் பெயரிடப்படும்.
இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமானது வரையான மழைவீழ்ச்சி நடைபெறும் வாய்ப்பு உள்ளதாகவும், ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
