க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரை அனைத்து முக்கிய பாடப்பிரிவுகளையும் உள்ளடக்கி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பரீட்சையை ஏற்பாடு செய்யும் பணிகள் தற்போது முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து வருகின்றன என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் பரீட்சைகள் சீராக மற்றும் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், தேவையான தளபாட வசதிகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.  

அத்துடன், 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக நாடு முழுவதும் மொத்தம் 2,362 பரீட்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.  

இந்த மையங்களில் பரீட்சை நடைபெறக்கூடிய வகையில், தேவையான அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.