மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (28) பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் உள்ளிட்ட மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இந்த எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள "மொந்தா" புயலின் தாக்கம் காரணமாகவே இந்த பலத்த காற்று வீசும் நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலச்சரிவு எச்சரிக்கை இன்று (28) மாலை 4.00 மணி முதல் நாளை (29) மாலை 4.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் நடைமுறையில் இருக்கும்.
எனவே, மக்களை அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதல் நிலை (மஞ்சள்) எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின் கீழ் உள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள்;
- காலி மாவட்டம் – நாகோடா, நாகஸ்தென்ன
- கண்டி மாவட்டம் – ஹட்டன், டெல்டா
- கேகாலை மாவட்டம் – யாத்தென, ராமுகமுவ
- இரத்தினபுரி மாவட்டம் – எரத்ன, குருவெல, இம்பரகமுவ
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலச்சரிவுகளுக்கு ஏற்பக்கூடிய அபாயங்களை கருத்தில் கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
