'ஒற்றுமையின் தூய்மையான பயணம்' – யாழ்ப்பாணத்திற்காக புறப்பட்ட யாழ்‌தேவி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,  "ஒற்றுமையின் தூய்மையான பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்‌தேவி ரயில் இன்று (13) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது. இந்நிகழ்வானது, க்ளீன் ஸ்ரீலங்கா செயலக அலுவலகம் மூலம் இதயபூர்வமான யாழ்ப்பாணப் பயணமாக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பயணத்தின் மூலம், யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் ஒற்றுமை என்ற முக்கியக் கருத்துகள் தொடர்பான தூய்மையான விழிப்புணர்வை உருவாக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இந்தத் திட்டம் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வு, கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ். பி. சுவஸ்வரா அவர்களின் தலைமையில், இன்று காலை கோட்டை ரயில்நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் நிறுவன அதிகாரிகள், ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

ஆரம்ப நிகழ்வையடுத்து, இன்று காலை 6.20க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்த யாழ்தேவி ரயில்,  காலை 6.40க்கு யாழ்ப்பாணம் நோக்கி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

யாழ்தேவி ரயில் இன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ் ரயில் நிலையத்தினை சென்றடையவுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ். பி. சுவஸ்வர, யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே "க்ளீன் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல், சமூக மற்றும் நெறிமுறைகளைக் கொண்ட தேசிய மட்டத்தின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் மூலம் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.