வெளிநாடுகளுக்குச் செல்கின்ற பட்டதாரிகளின் அரசிற்கு நிதியியல் பொறுப்புணர்வு தொடர்பில் ஆய்வாளர்கள் பரிந்துரை

இலங்கையின் அரசாங்க பல்கலைக்கழகங்களில் இலவசமாக பட்டம் பெற்ற மாணவர்களில், 50%க்கும் அதிகமானோர், பட்டப்படிப்பு முடிந்தவுடன் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள் என  புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்கள் பெரும்பாலும் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லை என்றும், இது நாட்டின் மூளைச் சோர்வு (brain drain) என்ற வகையில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாய்வு பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல மற்றும் லக்ஷ்மன் குமார ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பட்டப்படிப்புக்குப் பிறகு வெளிநாடுகளுக்குப் புறப்படும் மாணவர்களில், அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் துறைகளில் கல்வி கற்றவர்களின் இடம்பெயர்வு இன்னும் அதிகம் என்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனிடையே, 2023ஆம் ஆண்டு மட்டும் இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக கல்விக்காக 87 பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், இந்த தொகை வரி செலுத்தும் மக்களிடமிருந்து மற்றும்  பல்கலைக்கழகங்களின் சொந்த வருமானத்திலிருந்து பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, நாட்டின் மனித மூலதனத்தில் பெரும் முதலீடுகள் செய்யப்பட்ட பிறகும், அது வெளிநாடுகளுக்கே பயனளிக்கின்ற நிலையை உருவாக்கியுள்ளது என்ற கவலையை அதிகரிக்கிறது.

இலங்கையின் அரசாங்க பல்கலைக்கழக மாணவரொருவருக்காக, ஆண்டுக்கு 400,000 ரூபாயிலிருந்து 1.4 மில்லியன் ரூபாய்வரை அரசாங்கம் செலவிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலவச கல்வி பெற்று பட்டம் பெற்ற மாணவர்கள்,  படிப்பை முடித்தவுடன் வெளிநாடுகளுக்குப் புறப்பட்டு மீண்டும் திரும்பவில்லை என்ற நிலைமையை வைத்து, அரச செலவினை திருப்பிச் செலுத்தும் ஒரு பொறுப்புணர்வு முறையை உருவாக்குவது அவசியம் என  ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பான ஆய்வை, பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல மற்றும் லக்ஷ்மன் குமார ஆகியோர் மேற்கொண்டுள்ளதுடன்,  நாட்டின் மூளைச் சோர்வை (brain drain) தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் தேவைப்படுகிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டை நிரந்தரமாகவோ அல்லது நீண்டகாலத்திற்காகவோ விட்டு செல்லும் பட்டதாரிகள், குறைந்தது 10,000 – 15,000 அமெரிக்க டொலர்கள் வரையிலான தொகையை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும் அல்லது, தங்கள் குடும்பத்தினருக்காக வருடத்திற்கு 50,000 டொலர் வரை வெளிநாட்டிலிருந்து அனுப்ப வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

பட்டதாரிகளை நாட்டிலேயே பணியாற்ற கட்டாயப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும், வேலையின்மை, குறைந்த ஊதியம் போன்ற காரணங்களால்,  பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப தூண்டுகின்றனர் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆய்வு இன்னும் தொடர்கிறது என்பதோடு, 2025 இறுதிக்குள் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என பேராசிரியர்கள் வசந்த அதுகோரல மற்றும் லக்ஷ்மன் குமார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.