விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

விவசாயிகளுக்கு உர மானியங்களை டிஜிட்டல் தளத்தின் மூலம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான தீர்மானம், இன்று (19.08.2025) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது அறிவிக்கப்பட்டது.

அரசாங்கம் வழங்கும் உர மானியம், தகுதி பெற்ற விவசாயிகளிடம் சரியான நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் அந்த நிதியுதவியை உர தேவைக்காக மட்டுமே முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

எனவே, உர விநியோகத்தை  முறைப்படுத்தப்பட்டும், வினைத்திறனுடன் முன்னெடுக்கப்பட்டும் செயற்படுத்தும் நோக்கில், விவசாயிகளுக்கான உர விநியோகத்தில் QR குறியீடு அல்லது அதற்குச் சமமான ஏதேனும் நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என அமைச்சரவை ஆய்வு செய்துள்ளது.

அதற்கமைய, உர மானிய திட்டத்திற்கு தகைமை உள்ள அனைத்து விவசாயிகளையும், விவசாய அமைச்சின் கீழ் செயற்படும் பிரதேச அதிகாரிகள் மூலமாக அடையாளம் காண்வதற்கும், தகைமை பெற்ற விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்காக QR குறியீடு அல்லது ஏற்கக்கூடிய டிஜிட்டல் தொழில்நுட்ப முறையை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பொறுப்பை வகிக்கும் ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.