மீண்டும் தலைதூக்கியுள்ள கொரோனா அபாயம்!- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடந்த 2019ஆம் ஆண்டில் உலகம் பூராவுமுள்ள மக்களை பாதித்த கொரோனா வைரஸ் தொற்றானது, தற்போது மீண்டும் சில ஆசிய நாடுகளில் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிலும் ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கைகள் விடுத்துள்ளனர். பருவகால மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, தற்போதைய வைரஸ் பரவல் பொதுமக்களுக்கு அபாயமாக இருக்கக்கூடும் என்பதும், விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹாங்காஙில், தற்போதைய கொரோனா தொற்று விகிதம் 11.4% என அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்ட பல மாதிரிகளில் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சிங்கப்பூரில்,ஒரே வாரத்தில் 28% அதிகரிப்புடன், மே மாதத்தின் முதல் வாரத்தில் 14,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தாய்லாந்திலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் குறித்த மதிப்பீடுகள் தற்போதைக்கு வெளியாகவில்லை. இருந்தபோதிலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களை தவிர்த்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இக்கட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.