யாழில் கடவுச்சீட்டு அலுவலகம்


யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிக்க அமைச்சரவை சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் புதிய அலுவலகம் இயங்கத் தொடங்கும் வகையில் அதற்கான பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம், கடந்த தை மாதம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்ததையடுத்து ஆரம்பிக்கப்பட்டது. அதே நிகழ்வில், கடவுச்சீட்டு அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தையும் ஜனாதிபதி நேரில் பார்வையிட்டிருந்தார்.

இதற்கமைய, கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் அமைக்கப்பட்டு, அதனைச் செயல்படுத்த தேவையான உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்காக கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு வந்து நேர்முகப் பரீட்சை நடத்தியுள்ளது. 

‘ஒருநாள் சேவைக்கான’ வலைத்தள சேவையை யாழ்ப்பாணத்தில் அமல்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், விண்ணப்பங்களின் குறைவினால் தென்னிலங்கையிலிருந்து சேவை வழங்குநர்கள் அங்கு கொண்டு வரப்படவுள்ளனர்.

இந்த புதிய அலுவலகம், யாழ்ப்பாண மக்கள் தங்களது கடவுச்சீட்டு தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்ய நெருக்கமான மற்றும் விரைவான சேவையை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.