GPS செயலிழக்கச் செய்து வாடகை கார் அடகு – 80 இலட்சம் பண மோசடி
நீர்கொழும்பில் வாடகைக்கு பெறப்பட்ட ஒரு சொகுசு காரை யாழ்ப்பாணத்தில் ஒருவர் அடமானமாக வைத்து 80 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு தலைமறைவான நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
யாழ்ப்பாண நகரத்திற்கு அண்மையான பகுதியில் உரிமையாளர் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதேவேளை, குறித்த கார் குறித்து நீர்கொழும்பு பொலிஸாரும் தனிப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், யாழ்ப்பாணம் சென்று காரை மீட்டு சென்றுள்ளனர்.
கார் தொடர்பான விசாரணை
விசாரணைகளில் தெரியவந்ததாவது, நீர்கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனமொன்றில் இருந்து ஒரு நபர் காரை வாடகைக்கு பெற்றுள்ளார். சில நாட்கள் பயன்படுத்திய பின்னர், அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த GPS கருவியை அவர் செயலிழக்கச் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதே சமயம், குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் மற்றொரு நபரிடம் காரை அடமானமாக வைத்து 80 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர், அடமானமாக வைக்கப்பட்ட கார், நீர்கொழும்பில் வாடகைக்கு பெறப்பட்ட வாகனம் என்றும், அதனைச் சுற்றி பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அறிந்த அடமானம் பெற்ற நபர், பொலிஸ் நடவடிக்கைகளுக்கு அஞ்சியதால் காரை வீதியோரத்தில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
