கொழும்பு ஜிந்துபிட்டியில் நள்ளிரவு துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று (14) இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி – வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பலரை குறிவைத்து தாக்குதல்

கொழும்பில் தொழில் செய்து வந்த அந்த இளைஞர், சம்பவ தினத்தில் சிகை அலங்காரத்திற்காக ஒரு நிலையத்துக்குச் சென்றிருந்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிகை அலங்கார நிலையத்துக்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதன் விளைவாக ஐவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.