தலங்கம – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
தலங்கம – அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு பல்பொருள் அங்காடி முன்பாக, சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று (13) பிற்பகல் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சட்டத்தரணி, தனது கட்சிக்காரருடன் தொடர்புடைய தகவல்களை ‘லொகு பெட்டி’ என அழைக்கப்படும் குற்றவாளி தலைமையிலான குழுவுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படுவதால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் கருதுகின்றனர்.
தம்பதியினர் உயிரிழப்பு
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வண்டிக்குள் இருந்த தம்பதியினரை இலக்காக வைத்து, நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கார் ஒன்றில் வந்த குழுவினர் டி-56 வகை துப்பாக்கியை பயன்படுத்தி பல தடவைகள் சுட்டுவிட்டு, உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் வாகனத்தில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் பிடிகல பகுதியைச் சேர்ந்த ‘மல்வாரச்சி’ என்ற சட்டத்தரணியும், அவரது மனைவியும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தலங்கம பொலிஸாரின் மூன்று குழுக்கள் உட்பட பல பொலிஸ் அணிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
