வடக்கில் மீண்டும் மழை வாய்ப்பு – விவசாயிகளுக்கு எச்சரிக்கை
வடக்கு மாகாணத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளதால், விவசாயிகள் தங்களின் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வது அவசியம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் உருவாகி வரும் வளிமண்டல தளம்பல் நிலையின் தாக்கம் காரணமாக, எதிர்வரும் 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேல், வட மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது என தெரிவித்தார்.
இதன் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களில் சற்று கனமான மழை எதிர்பார்க்கப்படுவதுடன், கிழக்கு, மத்திய, மேல், வட மத்திய மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் 16ஆம் திகதியளவில் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாகவும், இதன் காரணமாக 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேநேரம், இலங்கையில் அதிக மழைக்கு காரணமாகக் கருதப்படும் மேடன்–ஜுலியன் அலை (MJO) எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடா கடற்பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதால், பெப்ரவரி மாதத்தின் இறுதி காலப்பகுதியிலும் மார்ச் மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், இவ்வானிலை நிலவரம் தொடர்பான உறுதிப்படுத்தல் அடுத்த சில நாட்களில் கிடைக்கும் எனவும், ஆகையால் இந்த காலப்பகுதியை கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடுவது சிறந்தது எனவும் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா வலியுறுத்தினார்.
