டோசர் மோதியதில் பொரளை பாடசாலைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் காயம்
கொழும்பு – பொரளை பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலையின் பாதுகாப்புச் சுவர் இடிந்து வீழ்ந்த விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான மண் தள்ளும் இயந்திரம் (டோசர்) ஒன்று பாடசாலையின் பாதுகாப்புச் சுவருடன் மோதியதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மோதலின் தாக்கத்தால் சுவர் திடீரென சரிந்து விழுந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 16 வயதுடைய மூன்று மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, சம்பவம் தொடர்பில் 48 வயதுடைய டோசர் இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
