மொரட்டுவையில் மோட்டார் சைக்கிள் விபத்து – 19 வயது இளைஞன் உயிரிழப்பு
உயர் மின்னழுத்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சமிந்து நிர்மால் பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் செவ்வாய்க்கிழமை (10) இரவு பாணந்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கொரலவெல்ல லன்சியா தேவாலயத்திற்கு அருகில், முன்னால் சென்ற சிறிய ரக லொறியை முந்திச் செல்ல முயன்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசை நோக்கி சறுக்கி, அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கடுமையாக காயமடைந்த இளைஞன் உடனடியாக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
