சாதாரண தரப் பரீட்சை: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட முக்கிய தகவல்கள்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.
விசேட ஏற்பாடுகள்
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அவசர நிலைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை சமாளிக்கும் வகையிலும், போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லும் வகையிலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட கட்டாய ஆவணங்களை இழந்த மாணவர்களுக்காக விசேட சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடையாள அட்டையை இழந்த மாணவர்கள் கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து பரீட்சைக்கு தோற்ற அனுமதி பெறலாம்.
பாடசாலை விண்ணப்பதாரிகளின் புகைப்படங்கள் அதிபரால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்; தனியார் விண்ணப்பதாரிகளின் புகைப்படங்கள் கிராம சேவகரின் கையொப்பத்துடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த மூன்று மாதங்களுக்குள் அதன் பெறுபேறுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
