சீரற்ற வானிலை: நுவரெலியா, மாத்தளை பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் அசாதாரண வானிலை நிலை காரணமாக, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பகுதிக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அவசர எச்சரிக்கை அறிகுறிகள்
நிலத்தில் பிளவுகள் தோன்றுதல், மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்வடைதல், எதிர்பாராத விதமாக நீரூற்றுகள் வெளிப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், அந்த இடத்தை உடனடியாக விட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மண்சரிவுடன் தொடர்புடைய எந்தவொரு அவசர அறிகுறியும் தென்பட்டால், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அல்லது சம்பந்தப்பட்ட பகுதி கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
