வர்த்தகர்களே எச்சரிக்கை! எரிவாயுவை பதுக்கி வைத்தால் சட்ட நடவடிக்கை பாயும் - அதிகாரசபை அதிரடி


சந்தையில் தேவையற்ற முறையில் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்திருப்பதை தவிர்க்குமாறு, நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தக முகவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எரிவாயு இருப்புகளை அநியாயமாக குவித்து வைத்திருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எரிவாயு விநியோகத்தை சீராக்கும் நோக்கில், லிட்ரோ நிறுவனம் இதுவரை சுமார் 3 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயு பற்றாக்குறை நிலவி வருவதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனிடையே, 3,900 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று (23) நாட்டை வந்தடைந்துள்ளது.

மேலும், நாளை (25) மற்றும் 28ஆம் திகதிகளில், தலா 7,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.