நாட்டின் வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை


வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நாட்டில் நிலவும் வானிலை தொடர்பாக விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் (17) பதிவான தகவல்களின் படி, அதிகமான மழை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு மழை அளவு 128.9 மில்லிமீற்றராக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, நாட்டின் குறைந்த வெப்பநிலை 13.4°C என நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரை மற்றும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்திருப்பதால், அந்த பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை கடற்பரப்புகளில் இதே போன்ற வானிலை நிலை ஏற்பட்டிருக்கலாம். அதேபோல், நாட்டின் ஏனைய கடலோர பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக களுத்துறை முதல் புத்தளம் மற்றும் மன்னார், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய கடற்பரப்புகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவும், மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் கடலில் பலத்த காற்று வீசும் என்பதுடன், கடல் தற்காலிகமாக மிகக் கொந்தளிப்பாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.