யாழ். பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்: களமிறங்கியது சிஐடி; நிர்வாகத்தின் மௌனத்தால் நேரடி விசாரணை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் கொடூரமான பகிடிவதைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தற்போது நேரடி விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
நிர்வாகத்தின் அலட்சியம்:
முன்னதாக, இந்தப் புகார்கள் குறித்து பல்கலைக்கழக மட்டத்தில் உள்ளக விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சிஐடி அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து உரிய பதில் வழங்கப்படாத நிலையில், தற்போது புலனாய்வுப் பிரிவினரே நேரடியாக விசாரணையில் குதித்துள்ளனர்.
புகாரில் உள்ள திடுக்கிடும் தகவல்கள்:
பகிடிவதை என்ற பெயரில் மாணவர்கள் மீது பாலியல் அத்துமீறல்கள், வன்முறைகள், உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்படுவதாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு:
இந்தச் சம்பவங்கள் பெரும்பாலும் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே உள்ள தனியார் விடுதிகள் மற்றும் வாடகை வீடுகளில் சிரேஷ்ட மாணவர்களால் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவருகிறது. இவ்வாறான வெளிப்புறச் சம்பவங்களுக்குப் பல்கலைக்கழகம் பொறுப்பேற்க முடியாது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் பொலிஸ் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என்றும் நிர்வாகம் கூறி வருவதாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Tags:
இலங்கை
