சீனாவின் பீஜிங்கிலிருந்து புதிய விமான சேவை இலங்கையில் தொடக்கம்

இலங்கை–சீனா இடையிலான புதிய விமான சேவையை தொடங்கி, சீனாவின் பீஜிங் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட முதல் “கெபிடல் ஏர் லைன்ஸ்” விமானம் நேற்று (31) மதியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமான சேவைக்காக ஏர்பஸ் A330 வகை விமானம் பயன்படுத்தப்பட்டதுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானம் தண்ணீர் வணக்க நிகழ்வுடன் வரவேற்கப்பட்டது.

விமான சேவை விபரம்

JD-487 என்ற விமானம், 170 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன், சீனாவின் பீஜிங்கிலிருந்து நேற்று மதியம் 1.46 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமான சேவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளதுடன், பிற்பகல் 2.20 மணிக்கு கட்டுநாயக்க வந்திறங்கி, அதே நாளில் மாலை 4.20 மணிக்கு மீண்டும் பீஜிங்கிற்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீன துணைத் தூதர் ஜு யான்வெய், கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி தலைவர் அருண ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.