இலங்கை பெற்றோர்களை உலுக்கிய கொடூர சம்பவம் – பாரிய குற்ற வலையமைப்பு வெளிச்சம்

கண்டி பகுதியில் 36 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி, அந்தச் செயல்களை வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஒரு வர்த்தகரும் ஒரு பொறியியலாளரும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேராதனை வீதியில் வசிக்கும் ஒருவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து ஆரம்ப விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, முதலில் பிரதான சந்தேகநபரான வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட பாரிய வலையமைப்பு தொடர்பான முக்கிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

இதுவரை மீட்கப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் 36 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுவர்களை தகாத செயல்களில் ஈடுபடுத்துவதற்காக மூன்று வெவ்வேறு இடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும், இந்த செயற்பாடுகள் நீண்ட கால திட்டமிடலுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தக் கும்பலுடன் தொடர்புடையதாக மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் சமூகத்தில் உயர்மட்ட பதவிகளை வகிப்பவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தர்ஷிகா குமாரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்ட பொறியியலாளரை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.