மீண்டும் அச்சுறுத்தும் மண்சரிவு: பல பகுதிகளில் அபாய எச்சரிக்கை அறிவிப்பு
நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பான ஆரம்பகட்ட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளதுடன், அது இன்று காலை 08.00 மணி முதல் நாளை காலை 08.00 மணி வரை அமலிலிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை மாவட்டத்தின் மீகாககிவுல மற்றும் கந்தகெட்டிய பகுதிகளுக்கும், அதேபோல் நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரன்கெத்த மற்றும் மதுரட்ட பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், நிலத்தில் பிளவுகள் உருவாகுதல், மரங்கள் சாய்ந்து விழுதல், திடீரென நீர் பெருக்கம் ஏற்படுதல் போன்ற மண்சரிவு அறிகுறிகள் தென்பட்டால், தாமதமின்றி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
