மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இளம் மருத்துவரின் திடீர் மறைவு – மக்கள் மத்தியில் ஆழ்ந்த சோகம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் கடமையாற்றி வந்த 31 வயதுடைய இளம் மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (MBBS) அவர்கள் திடீரென காலமானது, மட்டக்களப்பு மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (20) அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்டம் காரதீவு பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட அவர், மட்டக்களப்பு அரசடி பகுதியில் வசித்து வந்ததுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறந்த திறமையுடன் சேவையாற்றி வந்த மருத்துவராகக் கருதப்பட்டார்.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் தனது மருத்துவக் கல்வியை நிறைவு செய்த இவர், ஆரம்பத்தில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றியதுடன், பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சேவையாற்றி வந்தார்.

இளம் வயதில் நிகழ்ந்த இந்த திடீர் மரணம் மருத்துவத் துறையிலும், பொதுமக்களிடமும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் சமூக வலைத்தளங்கள் மற்றும் நேரடியாகவும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.