இலங்கையில் பழைய சிம் அட்டைதாரர்களுக்குப் புதிய உத்தரவு: மீண்டும் பதிவு செய்வது கட்டாயம்!
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2க்கு முன்னர் வழங்கப்பட்ட சிம் அட்டைகளை மீள்பதிவு செய்யவும், புதிய சிம் அட்டை விநியோகத்தில் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள 2019.08.02 அன்று வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், அந்தத் திகதிக்குப் பிறகு பெறப்பட்ட சிம் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2019.08.02க்கு முன் பெறப்பட்ட சிம் அட்டைகளின் உரிமையாளர் விவரங்கள் மீண்டும் சரியான முறையில் பதிவு செய்யப்படும் என அமைச்சரவை முடிவை அறிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுவரை முறையாக பதிவுசெய்யப்படாத 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களைச் சந்தாதாரர்களாக இணைப்பதற்கான புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதேபோல் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிம் அட்டைகள் வழங்கும் முறையிலும் புதிய ஒழுங்குமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
