தற்காலிக விசா விதிகள் கடுமை: கனடாவில் உள்ள தமிழர்கள் மத்தியில் அச்சம்
கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருபவர்கள், அந்த விசாவின் செல்லுபடியாகும் காலம் முடிந்தவுடன் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதிமுறைகள் தற்போது மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய அறிவிப்பினால், விசிட்டர் விசா உள்ளிட்ட பல்வேறு தற்காலிக விசாக்களில் கனடாவிற்குச் சென்றுள்ள பல தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு நிச்சயமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
தற்காலிக விசாவில் கனடாவிற்குள் நுழையும் நபர்கள், விசா காலம் முடிந்த பின் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைத் துல்லியமாக கண்காணிக்க டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எல்லைச் சோதனை முகவரகம், ஒருவர் கனடாவை விட்டு வெளியேறும் போது அவரது தகவல்களை பதிவு செய்தாலும், விசா காலாவதியான நபர் தானாகவே வெளியேறியுள்ளாரா என்பதை கண்டறியும் தானியங்கி முறைமை இல்லை என்றும் அவர் விளக்கினார். இதனால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, புதிய கண்காணிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2026ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் தற்காலிக விசாக்கள் காலாவதியாக உள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், விசிட்டர் விசா உள்ளிட்ட பல வகை விசாக்களில் கனடாவிற்குச் சென்றுள்ள பலருக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும், எதிர்காலம் தொடர்பான கவலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.png)