அக்குரேகொட இரட்டைக் கொலை: துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டதாக அமைச்சர் அறிவிப்பு
அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
இன்று (20.02.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார். குற்றத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு வாகனம் பத்தேகம பகுதியில் தீ வைத்து அழிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிகளை வழங்குவதற்காக வந்த மற்றொரு வாகனம் கொட்டாவ பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
குற்றம் நடைபெறுவதற்கு முன்னர் துப்பாக்கி ஏந்தியவர்களை தங்குமிடத்திற்குக் கொண்டு சென்ற வாகனம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேபோல், இந்தச் சம்பவத்தில் ரிவால்வர் வகை துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபர், ருக்ஹாவெல பகுதியைச் சேர்ந்த ரூபர்ட் சுரேஷ் எனவும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
