பசறையில் பரபரப்பு: வினாத்தாள்களுடன் சென்ற முச்சக்கர வண்டி தீப்பற்றி எரிந்தது!


பசறை பிரதேசத்தில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, நேற்று (18) திடீரென தீப்பற்றிய சம்பவம் பதிவாகியுள்ளது.

பரீட்சை தொடர்பான கடமைகளுக்காக வினாத்தாள்களுடன் மூன்று பெண் ஆசிரியர்கள் அந்த முச்சக்கர வண்டியில் பயணித்ததாகவும், அதனை ஆசிரியர் ஒருவரே ஓட்டிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தின் போது, பின்னால் வந்த இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான லொறியில் பயணித்த பணியாளர்கள் உடனடியாக செயல்பட்டு, முச்சக்கர வண்டியை நிறுத்தியதுடன் தீயை கட்டுப்படுத்தி, ஆசிரியர்களை எந்தவித ஆபத்தும் இன்றி பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லும் மற்றும் மீளப் பெறும் நடவடிக்கைகளில், உரிய வாகன வசதிகளும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கல்வி துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.