உயர்தர பரீட்சை மாணவர்கள் உட்பட மூவர் கஞ்சாவுடன் கைது

 

உயர்தரப் பரீட்சைக்கு தயாராகி வரும் இரண்டு பாடசாலை மாணவர்களும், அவர்களுக்கு கஞ்சா போதைப்பொருளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரும் சேர்த்து மூவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுணுகலை அலகொல்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மொத்தமாக 4,850 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை

புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சந்தேகநபர்களை சோதனை செய்துள்ளனர். இதன்போது, இரண்டு பாடசாலை மாணவர்களிடமிருந்து தலா 1,750 மில்லி கிராம் மற்றும் 1,300 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த மாணவர்களுக்கு கஞ்சா விநியோகித்ததாகக் கூறப்படும் நபரிடமிருந்து 1,800 மில்லி கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அவர்கள் நாளை (03) பசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.