ATM மோசடிகள் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது அதிக கவனத்துடன் செயல்படுமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, பணம் எடுக்கும் வேளையில் அறிமுகமில்லாத நபர்களின் உதவியை நாட வேண்டாம் என்றும், இதன் மூலம் ஏற்படக்கூடிய மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வங்கிகளுக்கு அருகில் நின்று, ATM இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல நடித்து அவர்களின் வங்கி அட்டைகளை அபகரித்து வந்த ஒருவரை தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 11 வங்கி அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர், பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அரச வங்கி ஒன்றிற்கு கடமை நிமித்தம் சென்றிருந்த பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் அவதானிப்பின்போது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உடனடி நடவடிக்கையாக, சந்தேகநபர் வங்கிக்கு அருகிலேயே கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இவருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பொலன்னறுவை, வெள்ளவத்தை போன்ற பகுதிகளில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ATM இயந்திரங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
.png)