நெடுங்கேணியில் கிவுள் ஓயா திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

வவுனியாவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிராக, இன்று நெடுங்கேணியில் மக்கள் உணர்வுபூர்வமான எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் பல பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டம், காலை 10.30 மணியளவில் நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் ஆரம்பமானது.

நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலம்

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியதுடன், கோஷங்களை எழுப்பியவாறு நெடுங்கேணி பிரதேச செயலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

அங்கு ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக தயார் செய்யப்பட்ட மகஜரொன்றை நெடுங்கேணி பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய அரசியல் தரப்பைச் சேர்ந்த எம்.ஏ. சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம், சுரேஸ் பிரேமச்சந்திரன், க. துளசி, மு. சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், சி. சிறிதரன், து. ரவிகரன், இ. சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பல பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.