காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பொலிஸார் விதித்துள்ள கட்டுப்பாடுகள்: பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
நாட்டின் சட்ட விதிமுறைகளை மதித்து காதலர் தினத்தை கொண்டாடுமாறு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு. வுட்லர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா, இதனைத் தெளிவுபடுத்தினார்.
சமூக ஊடக நடவடிக்கைகள் மீது கண்காணிப்பு
காதலர் தினத்தை முன்னிட்டு திட்டமிடப்படும் சட்டவிரோத செயல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக சிறார்களை குறிவைத்து நடைபெறும் நடவடிக்கைகள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இலங்கை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களை பயன்படுத்தி சிறார்களை நோக்கி பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறப்பு தினங்களை கொண்டாடுவதற்கு தடையில்லை என தெரிவித்த அவர், ஆனால் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.
இந்த சோதனைகள் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சிறார்களின் தவறான ஈடுபாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகின்றன என்றும் எஸ்.எஸ்.பி தல்துவா கூறினார்.
கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் பதிவாகியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் விளக்கினார்.
