வட்டிப்பண முரண்பாடு காரணமாக இளைஞர் கொலை
அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நீண்டகால முரண்பாடு
இந்தச் சம்பவத்தில், கட்டுவனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டிக்குப் பணம் வழங்குவது தொடர்பாக நீண்ட காலமாக இருந்து வந்த முரண்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய வாக்குவாதமே இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று மாலை ஏற்பட்ட மோதலின் போது, சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலையுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இளைஞரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
