மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில் பயங்கர விபத்து: லொறியுடன் மோதிய பேருந்து!
மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று, புனானை பகுதியில் லொறியுடன் மோதிய விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று (18) காலை மட்டக்களப்பு – வாழைச்சேனை புனானை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடியிலிருந்து பொலன்னறுவை நோக்கி சென்ற பேருந்தும், பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும் புனானை பகுதியில் நேருக்கு நேர் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் காரணமாக இரு வாகனங்களும் சேதமடைந்துள்ள போதிலும், பயணிகள் மற்றும் சாரதிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். சம்பவ நேரத்தில் அந்தப் பகுதியில் மழையுடனான வானிலை நிலவியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
