வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை சாத்தியம்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 50 மில்லிமீட்டரைத் தாண்டிய மிதமான முதல் பலத்த மழை சில இடங்களில் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல முறை மழை பெய்யும் நிலை காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

நாட்டின் மற்ற பகுதிகளில், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை நேரங்களில் திடீரென வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களை குறைக்கும் வகையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.