யாழ்ப்பாணம் - நெடுந்தீவு இடையிலான பேருந்து சேவை 5 மாதங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான புதிய பேருந்து ஒன்று கடற்படையின் விசேட படகு மூலம் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை நெடுந்தீவு முழுவதற்குமான போக்குவரத்து தேவைகளை, இலங்கை போக்குவரத்து சபையின் ஒரே ஒரு பேருந்து மட்டுமே நிறைவேற்றி வந்தது. பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்ட அந்த பேருந்து துரு பிடித்து அடிக்கடி பழுதடையும் நிலைக்கு சென்றதால், கடும் சிரமங்களுக்கிடையே பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டு வந்தது.
மேலும், சமீப காலமாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் நெடுந்தீவுக்கு வருகை தரும் சூழலில், தீவு மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நெடுந்தீவு பேருந்து சேவை தொடர்பான விடயம் விவாதிக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில், உடனடியாக தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் தற்போது புதிய பேருந்து நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இதுவரை நெடுந்தீவில் சேவையில் இருந்த பழைய பேருந்து பழுது திருத்தப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
