வீடு முழுவதும் எரிந்து நாசம்: அக்குரணையில் தீ விபத்தில் 5 பேர் பாதிப்பு
அக்குரணை தொடங்கொல்ல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (11) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வீட்டிலிருந்து எழுந்த அலறல் சத்தத்தை கேட்டு அண்டை வீட்டார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், ஜன்னலை உடைத்து உள்ளே சிக்கியிருந்த ஐந்து பேரையும் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூவர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மற்ற இருவர் புகை மூச்சுத் தாக்கம் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்தின் காரணமாக வீட்டில் இருந்த பொருட்கள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், வீட்டிற்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பாக அலவதுகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
