முன்னாள் எம்.பி அமரகீர்த்தி கொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி: கடந்த 2022 மே 9 ஆம் திகதி நாடு முழுவதும் பரவிய வன்முறைகளின் போது, நிட்டம்புவ பகுதியில் வைத்து அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கி கொல்லப்பட்டனர். இந்த இரட்டைப் படுகொலை தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 42 பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று (11) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
முன்னதாக ஜனவரி 14 ஆம் திகதி இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த நிலையில், சில காரணங்களால் அது இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது பிரதிவாதிகள் அனைவரும் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்டிருந்தனர்.
