முல்லைத்தீவில் துயரச் சம்பவம்: மின்சாரம் தாக்கி 5 வயது சிறுவன் பலி

முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் ஏற்பட்ட துயரமான சம்பவத்தில், மின்சாரம் தாக்கி ஐந்து வயது சிறுவன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த புளியங்குளம் அலகரை கிராமத்தில் வசித்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான ஆரம்ப தகவல்களின் படி, குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல்லு வெட்டுவதற்காக சென்றிருந்த போது, யானைகளைத் தடுக்கும் நோக்கில் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியுள்ளார். இதன்போது சிறுவனின் கழுத்து மின்சார வேலியில் அகப்பட்டதன் காரணமாக மின்சாரம் தாக்கி கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக சிறுவனை ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேலதிக சட்ட வைத்திய விசாரணைகளுக்காக சிறுவனின் உடலம் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்ததாக கூறப்படும் காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.