இலங்கையில் புதிய உச்சம்: 4 இலட்சத்தை எட்டியது ஒரு பவுண் தங்கம் - இன்றைய நிலவரம்!
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் தொடர்பாக நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையால், உலக சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து குறைவடைந்து வருகிறது. இதன் தாக்கமாக, கடந்த மூன்று வாரங்களாக இல்லாத அளவில் தங்கத்தின் விலை உயர்வை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,150.22 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக இலங்கை சந்தையிலும் தங்க விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்று (பெப்ரவரி 24) இலங்கையில் தங்கத்தின் விலை நிலையாகக் காணப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 396,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று அதன் விலையில் 4,000 ரூபாய் உயர்வு பதிவாகியது. இதனைத் தொடர்ந்து இன்று மேலதிக விலை மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
தற்போதைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 400,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 46,250 ரூபாயாகவும் காணப்படுகிறது.
