இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த 25 இந்திய மீனவர்கள் கைது; சட்ட நடவடிக்கை தீவிரம்.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (15) மற்றும் இன்று (16) மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கைகளின் போதே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் உறுதிப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியாவிலுள்ள காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு முதற்கட்ட விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு மீனவர்களும் அவர்களின் படகுகளும் காங்கேசன்துறை கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
