எலபாத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில், எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று ஏற்பட்ட விபத்தில் ஒரு பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி அலகெட்டிய பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கானதோல – இலுக்குதென்ன பிரதான வீதியில், 79ஆம் இலக்க ரப்பர் தோட்டத்திற்கு அருகிலேயே நேற்று (06) நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியோரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்த மாணவியின் மீது, அதே திசையில் பயணித்த லொறி ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையாக காயமடைந்த நிலையில் மாணவி உடனடியாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் லொறி சாரதி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து எலபாத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
